Devotional MP3 | tamil ringtones | tamil e-books | latest MP3 | latest Movies | Mobile collection

தூக்கம் விற்ற காசுகள்.....

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற

கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு

கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!

கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்
" என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு

ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்

அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!

"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு....
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

0 comments:

Privacy Policy    | Back to TOP