தமிழ்ச் செம்மொழி மாநாடு
நன்றி thatstamil
செம்மொழித் தமிழ்...
உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.
மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும், வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மொழியே செம்மொழி என கூறுகிறார் மொழியியல் வல்லுநர் ஜார்ஜ் ஹார்ட்.
இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொண்ட மொழிகள் வெகு சிலதான். அதில் ஒன்று நம் செம்மொழி தமிழ்.
இலக்கணத்திலும், இலக்கியத்திலும் சிறந்த மொழிகளுக்கே இந்த சிறப்பு கிடைக்கிறது. சுமேரிய மொழி, ஆதி எகிப்திய மொழி, ஆதி பாபிலோனிய மொழி, ஹீப்ரூ, சீன மொழி, கிரேக்கம், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், மண்டாயிக், சிரியாக், ஆர்மீனியன், பெர்சியன் ஆகியவற்றை செம்மொழிகளாக உலகம் கண்டிருக்கிறது.
ஆனால் இந்த சிறிய மொழிக் கூட்டத்தில் இன்று உலக அளவில் வலுவான வரலாற்றுடன், மிக வீரியமான உயிர்ப்புடன் கூடிய ஒரே மொழியாக தமிழ் மட்டுமே திகழ்கிறது என்பது நிஜம், அது தமிழுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடு இணையே இல்லை என்பது பல்வேறு செம்மொழிகளை ஆய்வு செய்தவர்கள் அளித்துள்ள தீர்ப்பு.
செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.
தமிழ் எனும் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.
செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.
செந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.
செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.
தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் லத்தீன் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமஸ்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது. ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.
தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிவு.
பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிவு.
தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிவு.
ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனகல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.
தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று தீர்மானம் இயற்றியுள்ளன.
தனிச் சிறப்புக்கு சங்க இலக்கியங்கள்...
தொல்காப்பியம் மட்டுமல்லாமல் தமிழுக்கு மணி மகுடமாக விளங்குபவை சங்க கால இலக்கியங்கள். அவற்றில் பல நம்மிடையே இன்று இல்லை. காலம் அவற்றை அழித்து விட்டது. நமது கைக்குக் கிடைத்துள்ள சில நூல்கள் ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழின் தனிச் சிறப்பை வெளிக்காட்ட உதவுகிறது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அக நானூறு, புற நானூறு, நற்றினை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவை அவற்றில் சில. இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் மிக செழுமையான நிலையில் இருந்தது. சங்க கால இலக்கியம், தமிழின் பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேபோல தமிழின் தலை சிறந்த அடையாளங்களில் ஒன்று திருக்குறள். தமிழ் என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட வராமல், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருந்தும் வகையிலான இந்த அரும் படைப்பு, தமிழுக்கு மட்டும் சொந்தமானதல்ல, உலகுக்கே பொதுவானது. அதனால்தான் குறளை உலகப் பொது மறையாக போற்றுகிறது இலக்கிய உலகம்.
கி.பி. 3வது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களைக் கண்டது தமிழ். தமிழின் ராமாயணம், மகாபாரதம் என இதைச் சொல்லலாம். அதேபோல கம்ப ராமாயணமும். தமிழின் அபாரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
வால்மீகியின் ராயாணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படைப்பை கம்பர் படைத்திருந்தாலும், அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தனது சுய படைப்பு போல இதை அமைத்திருப்பது மிக மிக வியப்புக்குரியது. அது கம்பரின் திறமையா அல்லது தமிழின் செழுமையா என்பதே ஒரு பட்டிமன்றத் தலைப்புக்குரியது. அதனால்தான் இன்றளவும் கம்ப ராமாயாணம் விவாதப் பொருளாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கொணடிருக்கிறது.
பரவசப்படுத்தும் பக்தி இலக்கியம்
பக்தி இலக்கியத்திலும் தமிழுக்கு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக நாயன்மார் இலக்கியம் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நான்கு தலை சிறந்த நாயன்மார்கள் ஆவர்.
அதேபோல 12 ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த சேவை மறக்க முடியாதது. அவர்களில் ஆண்டாளும், குலசேகர ஆழ்வாரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் படைத்த திருப்பாவை தமிழின் தனிச் சிறப்புக்கு அருமையான உதாரணம்.
தமிழுக்கு அருஞ்சேவை புரிந்தவர்களில் உமறுப் புலவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சீறாப்புராணம் என்ற சீரிய காவியத்தைப் படைத்தவர் உமறுப் புலவர். 5000 பாடல்களில் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அரிய பாடல்கள் மூலம் வடித்துள்ளார் உமறுப் புலவர்.
அதேபோல கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தாக்கமும் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது. அதிலும் கால்டுவெல், வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி ஆகியோரின் பங்களிப்பு தமிழுக்கு மிகப் பெரியது. இத்தாலியைச் சேர்ந்த பெஸ்கி படைத்த தேம்பவாணி தமிழின் அரும்பெரும் கவிப் படைப்புகளில் ஒன்றாக ஜொலிக்கிறது.
இப்படி தமிழின் சிறப்புகளையும், அதன் சீரையும், செழுமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட சிறப்புடைய தமிழ், 2004ம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செம்மொழியாக பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கி விட்டது என்பதே உண்மை.
தமிழின் பிற சிறப்புகள்
- தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது.
- கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும்.
- இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.
- தமிழில் கிட்டத்தட்ட 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரி ஆகியவையே அவை.
- உலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது தமிழ்.
- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கயானா, பிஜி, சூரினாம், டிரினிடாட் டொபாகோ, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களும், தமிழும் கணிசமாக உள்ளனர்.
- எத்தகைய மொழிக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயல்பும், பாலில் நீர் கலப்பது போல இயைந்து போகும் சிறப்பும் உள்ள மொழி தமிழ்.
இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இன்றாவது ஆனதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு மாநாடு நடத்துவது மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, தமிழக அரசு சூட்டும் இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.
ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு.
தமிழால் வாழும் நாம் நம் செம்மொழிக்கு எடுக்கப்படும் விழாவை வாழ்த்துவோம், அக மகிழ்வோம்.